ஏழாயிரம்பண்ணை, செப்.5: வெம்பக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரை மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் வெப்பம் தணிந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். விருதுநகர் மாவட்டத்தை பொருத்தவரையில் வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் பருவ மழை பெய்யாததால் நீர் நிலைகள் வறண்டு காணப்படுகிறது. இதனால் மழையை எதிர்பார்த்து விவசாய பணியை விவசாயிகள் மேற்கொள்ளாமல் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை வெம்பக்கோட்டை அதன் சுற்றுவட்டார பகுதிகளான சத்திரப்பட்டி, வணமூர்த்தி லிங்கபுரம், கோமாளிப்பட்டி, கணஞ்சாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக பரவலாக சாரல் மழை பெய்தது. வெப்பத்தால் கடும் அவதி அடைந்து வந்த மக்கள் திடீரென பெய்த சாரல் மழையால் மகிழ்ச்சி அடைந்தனர்.


