சிவகாசி, நவ. 4: சிவகாசி ஒன்றியம் தேவர்குளம் ஊராட்சி இபி காலனியில் 2,000க்கும் மேற்பட்ட குடியிருப்பில் மக்கள் வசிக்கின்றனர். அரசு அதிகாரிகள், தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். இடவசதி இருந்தும் இதுவரை சிறுவர் பூங்கா அமைக்கப்படவில்லை. இதனால், மாணவர்கள், குழந்தைகள் விடுமுறை நாட்கள், காலை, மாலை வேளைகளை பயனுள்ளதாக மாற்றமுடியாமல் தவித்து வருகின்றனர்.
பூங்கா வசதி இல்லாமல், விடுமுறை நாட்கள் மற்றும் ஓய்வு நேரங்களில், குழந்தைகள் விளையாட முடியாமல் அவதிப்படுகின்றனர். ஆகவே, இபி காலனியில் சிறுவர்கள் பயன்பாட்டிற்காக, பூங்கா அமைக்க வேண்டும் என்றும் அத்துடன், விளையாட்டு உபகரணங்களையும் அமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், ‘‘ஆயிரக்கணக்கான குடியிருப்பு வீடுகள் உள்ள இ.பி.காலனியில் நடைபயிற்சி மேற்கொள்ள இடவசதிகள் இல்லை.
இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் மெயின் ரோட்டில்தான் நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனால் குடியிருப்பு வாசிகள் சாலை விபத்துகளில் சிக்குகின்றனர். சிறுவர்கள் விளையாட பூங்கா வசதி இல்லாததால் வீட்டிலேயே செல்போனில் முடங்குகின்றனர். இதனால் அவர்கள் மனரீதியான பாதிப்பை சந்திக்கின்றனர். எனவே, தனியார் தோட்டம் அருகே சிறுவர் பூங்காவிற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்றனர்.


