சாத்தூர், நவ.3: சாத்தூர் ரயில்வே கேட்டில் சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்தூர் இருக்கன்குடி சாலையில் ரயில்வே கேட் உள்ளது. இந்த கேட்டை கடந்து தான் சாத்தூர் நகரின் கிழக்கு பகுதியில் இருக்கும் இருக்கன்குடி, கத்தாளம்பட்டி, அம்மாபட்டி, பந்தல்குடி, நென்மேனி உட்பட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் செல்ல வேண்டியுள்ளது. கேட்டின் உள் பகுதியில் இருக்கும் சாலையை ரயில்வே நிர்வாகம் தான் பராமரிப்பு செய்ய வேண்டும்.
ஆனால் கடந்த பல மாதங்களாக சாலை பராமரிப்பு பணிகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொள்ளாமல் உள்ளது. இதனால் சாலை முழுவதும் சேதமடைந்து துண்டும் குழியுமாக உள்ளது. ரயில் வருகையின் போது கேட்டை மூடி திறந்து விடும்போது கடந்து செல்லும் இருசக்கர வாகனங்கள் பள்ளங்களில் சிக்கி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே ரயில்வே நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை சரி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாகன ஓட்டிகள் கூறுகையில், ரயில்வே கேட்டில் உள்ள சாலை படுமோசமாக உள்ளது. இந்த காரணமாக ரயில் கடந்தவுடன் மொத்தமாக டூவீலரில் செல்லும்போது ஒன்றுடன் ஒன்று மோதி வீண் தகராறு ஏற்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள் சரியில்லாத சாலையால் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே வாகன ஓட்டிகளின் சிரமத்தை போக்கும் வகையில் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றனர்.


