Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பயன்பாடின்றி மூடி கிடக்கிறது;  சாத்தூர் உழவர் சந்தை செயல்படுமா?.. விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு

சாத்தூர், ஜூன் 2: சாத்தூர் உழவர்சந்தையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் காய்கறி பயிர் செய்யும் விவசாயிகள் இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்யாமல் நேரடியாக நுகர்வோரிடம் நல்ல லாபத்தில் விற்பனை செய்ய தமிழக அரசு வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை மூலம் உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் கடந்த 2000ம் ஆண்டு சாத்தூரில் உழவர் சந்தை திறக்கப்பட்டது. விவசாயிகள் காய்கறிகளை கட்டணம் இல்லாமல் அரசு பஸ்களில் எடுத்து வந்து விற்பனை செய்யவும், இலவசமாக கடைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மேலும் எடை அளவை சரியாக வழங்க தராசும் இலவசமாக வழங்கப்பட்டது. விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கு இடையே இணைப்பை ஏற்படுத்தி, இருவரும் பயன்பெறும் நோக்கத்துடன் உழவர் சந்தை திறக்கப்பட்டது. சாத்தூர் உழவர் சந்தை நீண்ட காலமாக செயல்பாட்டில் இல்லாமல் இருந்து வருகிறது. இந்த உழவர் சந்தை நகரின் நான்குவழிச் சாலை பெரியார்நகரின் அருகே அமைந்து இருந்தும் பல்வேறு காரணங்களால் செயல்படாமல் உள்ளது. இதனால் விவசாயிகள் உற்பத்தி செய்த காய்கறிகளை விற்பனை செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. வெளிமார்க்கெட்டில் காய்கறிகளை விற்பனை செய்யும் போது உரிய லாபம் விவசாயிகளுக்கு கிடைக்காமல் போகிறது.

தற்போது உழவர் சந்தை என்ற பெயரில் பெயர்ப்பலகை மட்டுமே உள்ளது. எனவே கட்டிடங்களை பழுது பார்த்து சாத்தூர் உழவர் சந்தையை மீண்டும் செயல்படுத்தி கட்டணமில்லாத கடைகளை உண்மையான விவசாயிகளுக்கு வழங்கி, மக்களுக்கு தரமான காய்கறிகளை சரியான விலையில் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சமூக ஆர்வலர்கள் கூறுகையில், விவசாயிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சாத்தூரில் திறக்கப்பட்ட உழவர் சந்தை ஆரம்பத்தில் நல்லபடியாக செயல்பட்டு வந்தது. ஆனால் அதன்பிறகு பல்வேறு காரணங்களால் உரிய முறையில் செயல்படாமல் முடங்கியுள்ளது.

இதனால் விவசாயிகள் சரியான விலை கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். பொதுமக்களும் காய்கறிகளை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டி உள்ளது. எனவே சாத்தூர் உழவர் சந்தையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.