திருச்சுழி, அக். 28: எம்.ரெட்டியபட்டி பகுதியில் உள்ள திருச்சுழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் மணிமாறன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் செல்வம் மற்றும் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
மேலும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மனு கொடுப்பதற்காக திருச்சுழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் சென்ற போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் யாருமே அலுவலகத்தில் இல்லாததால் விவசாய தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வட்டார வளர்ச்சி அலுவலரின் அறையை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து கண்டன கோஷங்களை எழுப்பி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்டுமான சங்கம் மாவட்ட தலைவர் தங்கராஜ், விவசாய சங்க மாவட்ட தலைவர் சங்கர பாண்டி மற்றும் விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


