சிவகாசி, மே 19: சிவகாசியில் டூவீலர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அச்சக தொழிலாளி பரிதாபமாக இறந்தார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஆலாவூரணியை சேர்ந்தவர் பால்பாண்டி (28). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். பால்பாண்டி சிவகாசியிலுள்ள அச்சகத்தில் வேலைபார்த்து வந்தார்.
நேற்று காலை டூவீலரில் வேலைக்கு சென்றார். சிவகாசி-திருத்தங்கல் சாலையில் குறுக்குப்பாதையில் சென்ற போது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், பால்பாண்டியின் டூவீலர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவலறிந்த சிவகாசி கிழக்கு போலீசார் பால்பாண்டியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


