Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

அயன்ரெட்டியாபட்டி அரசுப்பள்ளிக்கு புதிய சுற்றுச்சுவர் அமைக்கும் பணி; அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்

காரியாபட்டி, நவ.3: அயன்ரெட்டியாபட்டி அரசுப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளை அமைச்சர்கள் ஜெகதீஸ்வரி, வன்னிஅரசு அடிக்கல்நாட்டி துவக்கி வைத்தனர். காரியாபட்டி அருகே மல்லாங்கிணறு அயன்ரெட்டியாபட்டியில் அரசுப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்று நடைபெற்றது. கலெக்டர் ஷரண்யா அறி தலைமை வகித்தார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, சமூக நீதித்துறை அமைச்சர் வன்னிஅரசு ஆகியோர் அடிக்கல்நாட்டி பணிகளை துவக்கி வைத்தனர்.விழாவில் அமைச்சர் வன்னிஅரசு பேசுகையில், ‘‘தமிழக அரசுப்பள்ளி மாணவர்கள் சிறந்த கல்வியினை பாதுகாக்கப்பட்ட சூழலில் கற்றிட வேண்டும் என்பதற்காக பள்ளிக்கல்வித்துறையின் மூலம் ஏராளமான உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அயன்ரெட்டியாபட்டி அரசு துவக்கப்பள்ளியானது நான் கல்வி பயின்ற பள்ளி ஆகும்.

தமிழக அமைச்சரவையின் சமூக நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின் பிறந்த ஊரான அயன்ரெட்டியாபட்டிக்கு நான் வந்த போது பெரும்பான்மையான பொதுமக்கள் என்னிடம் வைத்த கோரிக்கை இப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் வேண்டும் என்பதுதான். நான், கலெக்டர் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஆகியோர் தமிழ் வழியில் பயின்றவர்கள் தான். அரசுப்பள்ளியில் பயின்றால் உயர்ந்த நிலையினை அடைந்திட முடியாது என்ற தவறான எண்ணத்தை விடுத்து பெற்றோர்கள் தங்களது குழுந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்த்து பயில வைக்க வேண்டும்.

அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அரசின் திட்டங்களை பெறுவதற்கு சாதிச்சான்றிதழ் மிகுந்த அவசியமானதாகும். அது அனைவருக்கும் கிடைத்துள்ளதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும். அதேபோல் பொதுமக்களுக்கு இணையவழி பட்டா பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதாக கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. விரைந்து அதற்கு தீர்வு கண்டு உரியவர்களுக்கு இணையவழி பட்டா கிடைப்பதனை துறை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும்’’ என்று பேசினார்.

விழாவில் அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசுகையில், ‘‘தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களை உற்ற உறவுகளாக எண்ணி அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை குறைந்த காலத்திலேயே ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறார். தேர்தல் காலங்களில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்த பல்வேறு வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார்.

கூடிய விரைவில் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றித் தருவார். ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகளை சமூக பொறுப்புணர்வுடன் வளர்க்கும் பட்சத்தில் மாணவர்கள் வழிமாறி செல்ல மாட்டார்கள். ஆசிரியர்கள் பள்ளி மாணவர்களை மிகுந்த பொறுப்புணர்வுடன் கண்காணித்து வழிநடத்திட வேண்டும்’’ என்று தெரிவித்தார். விழாவில் அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் மாரிமுத்து, தாசில்தார் திருப்பதி, முதன்மை கல்வி அலுவலர் அரவிந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.