விருதுநகர்: வேளாண் துறையினர் தெரிவிக்கையில்: மாவட்டத்தில் தற்போது நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பூச்சி நோய் தாக்குதல் ஏற்படும் இடங்களில் விவசாயிகள் பூச்சிக்கொல்லி மற்றும் நோய்க் கொல்லி மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பூச்சிக்கொல்லி மருந்து தேவைப்படும் போது மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட ஆட்களையே மருந்து தெளிக்க பயன்படுத்த வேண்டும். மருந்து தெளிப்பவர் பாதுகாப்பு உடைகளையும், ரப்பர் காலனிகளையும், கைகளுக்கு பாதுகாப்பு உறைகளையும் அணிந்து கொள்ள வேண்டும். தெளிப்பான்களில் கசிவு ஏதேனும் இருந்தால் சரி செய்து கொள்ள வேண்டும். மருந்து கைகளிலோ அல்லது உடலிலோ பட்டு விட்டால் உடனே சுத்தம் செய்து கொள்ள வேண்டும். மருந்துகளை கையாள வயது முதிர்ந்தவர்களையோ கருவுற்ற தாய்மார்களையோ, குழந்தைகளை பராமரிக்கும் பெண்களையோ மேலும் நோய்வாய் பட்டவர்களையோ அனுமதிக்க கூடாது.
காலியான மருந்து பாட்டில் மற்றும் கலன்களை நீர்நிலைகளிலோ, வயலிலோ வீசி எறிவதை அறவே தவிர்க்க வேண்டும். அவற்றை வீட்டில் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். அவற்றை மண்ணுக்குள் புதைத்து விடுவது நல்லது. மருந்து தெளித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் உணவு அருந்துவதோ, குடிநீர் அருந்துவதோ கூடாது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


