சிவகாசி, செப். 29: சிவகாசி மற்றும் சுற்றுவட்டார மக்கள் பயன்பெறும் வகையில் சிவகாசியில் சார் பதிவாளர் அலுவலகம் தொடங்கப்பட்டது. ஆனால் பல வருடங்கள் ஆகியும் இந்த அலுவலகம் காமராஜர் சிலை அருகே சேதம் அடைந்த கட்டிடத்திலேயே இயங்கி வந்தது. இதனால் பிறப்பு, இறப்பு, பத்திரப்பதிவு போன்ற சான்றிதழ் பெற வரும் பொதுமக்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலை காரணமாக அவதியடைந்து வந்தனர்.
இதனால் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் அரசு சார்பில் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த திமுக ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டு சிவகாசி காமராஜர் சிலை அருகில் உள்ள கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு அதே இடத்தில் சார் பதிவாளர் அலுவலகம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு பணிகள் தொடங்கி கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. இதனால் அருகில் உள்ள வாடகை கட்டிடத்தில் தற்போது சார் பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகின்றது.
தற்போது புதிய கட்டிட பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் சார் பதிவாளர் அலுவலகம் புதுப்பொலிவுடன் காணப்படுகிறது. பணிகள் முடிந்து 2 மாதங்களுக்கு மேலாகியும் இந்த கட்டிடம் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் வாடகை கட்டிடத்தில் இந்த அலுவலகம் மிகவும் இட நெருக்கடியோடு இயங்கி வருகின்றது.
பத்திரம் பதிய வரும் பொதுமக்கள் நீண்ட நேரம் கால்கடுக்க காத்திருந்து பத்திரபதிவு செய்து வருகின்றனர். சார் பதிவாளர் அலுவலகம் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டும் திறக்கப்படாததது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே சிவகாசி சார் பதிவாளர் அலுவலக புதிய கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

