ஸ்ரீவில்லிபுத்தூர், செப். 28: புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் 50 கிலோ மலர்களால் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலையில் மலைமீது புகழ்பெற்ற சீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. புரட்டாசி மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையான நேற்று முன் தினம் சுமார் 16 ஆயிரம் பக்தர்கள் திரண்டு வந்து, மலை மேல் வீற்றிருக்கும் பெருமாளை படியேறி சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
இதையொட்டி நேற்று முன் தினம் இரவு சீனிவாச பெருமாளுக்கு புஷ்ப அங்கி சேவை நடைபெற்றது. இதையொட்டி 50 கிலோ மலர்களால் மாலைகள் தயாரிக்கப்பட்டு, சீனிவாச பெருமாளுக்கு அணிவிக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி சக்கரை அம்மாள் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


