Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மின் கம்பங்களில் பந்தல்கள் அமைப்பதை தவிர்க்க வேண்டும்: மின்வாரியம் அறிவுறுத்தல்

சிவகாசி, ஜூலை 21: மின் விபத்துகளை தடுக்கும் நோக்குடன் பொதுமக்கள் சில அத்தியாவசிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்று மின்வாரிய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது: மழையின் காரணமாக மின்கம்பங்கள் மற்றும் மின் அமைப்புகளில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். இந்த சூழ்நிலையில், மின்கம்பங்களில் கசிவு அல்லது மின்சாரம் பாய வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே, பொதுமக்கள் மின்கம்பங்கள் மற்றும் அவற்றைத் தாங்கும் இரும்புக் கம்பிகள் (ஸ்டே கம்பி) ஆகியவற்றில் கால்நடைகளைக் கட்டுவதைத் தவிர்க்க வேண்டும். அவ்வாறு கட்டும்போது எதிர்பாராதவிதமாக மின் விபத்து ஏற்பட்டு, கால்நடைகளுக்கும் அதை செய்பவர்களுக்கும் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், ஈரமான கைகள் அல்லது ஈரமாக இருக்கும்போது மின் சுவிட்சுகள் மற்றும் மின்சாதனங்களை தொடுவதை தவிர்க்க வேண்டும்.

காற்று மற்றும் மழையால் அறுந்து விழுந்த மின்கம்பிகள் அல்லது சாய்ந்த மின்கம்பங்களை கண்டால், அதன் அருகில் செல்லாமல் உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்கோ அல்லது மாநில மின்நுகர்வோர் சேவை மையத்திற்கோ தகவல் தெரிவிக்க வேண்டும். மின் கம்பங்களுக்கு மிக அருகில் இருக்கும் மரக்கிளைகளை வெட்டுவதற்கு பொதுமக்கள் சுயமாக முயற்சி செய்யாமல், மின்வாரிய அதிகாரிகளை அணுகி உரிய அனுமதியுடன் மேற்கொள்ள வேண்டும். மின் கம்பங்களில் பந்தல்கள் அமைப்பதையோ அல்லது துணி காயப்போட கயிறு கட்டுவதையோ தவிர்க்க வேண்டும்.

இடி மின்னல் ஏற்படும்போது, மின்கம்பங்கள், மரங்கள் மற்றும் நீர்நிலைகளுக்கு அடியில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, மழை காலத்தில் ஏற்படும் மின் விபத்துகளைத் தடுத்து, உயிர்கள் மற்றும் உடமைகளைப் பாதுகாத்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.