Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதால் ரயில்வே அனுமதி பெறுவதில் சிக்கல் அவசர கோலத்தில் திறக்கப்பட்ட சிவகாசி அரசு மருத்துவமனை கட்டிடம்: பயன்பாட்டிற்கு வராததால் நோயாளிகள் அதிருப்தி

சிவகாசி, ஆக.20: சிவகாசியில் தமிழக முதல்வர் விஜய், அவசர கோலத்தில் திறந்து வைத்த அரசு மருத்துவமனை புதிய கட்டிடம் பயன்பாட்டிற்கு வராததால் நோயாளிகள் அதிருப்தியடைந்துள்ளனர். சிவகாசி அரசு மருத்துவமனைக்கு, சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட கிராமத்தினர் தினமும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு, உயர் சிகிச்சை மற்றும் விபத்துகளுக்கு உடனடி சிகிச்சை அளிக்க போதிய வசதி இல்லை. இதனால், விபத்தில் சிக்கியவருக்கு உடனே சிகிச்சை அளிக்க முடியாததால், விருதுநகர், மதுரை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். அவ்வாறு நீண்ட தூரமுள்ள மருத்துவமனைக்கு செல்லும்போது, காலதாமதத்தால் சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. எனவே, சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக கட்டிடம் கட்டி, அனைத்து சிறப்பு சிகிச்சைகளும் அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு நோயாளிகள் கோரிக்கை விடுத்தனர்.

அதனை தொடர்ந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் ரூ.32 கோடி மதிப்பீட்டில் 70 ஆயிரத்து 321 சதுர அடி பரப்பளவில் தரைத்தளத்துடன் சேர்த்து மொத்தம் 7 தளங்களை கொண்டு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இதில் மருத்துவ ஆய்வகம், டிஜிட்டல் எக்ஸ்ரே, யுஎஸ்ஜி, எக்ஸ்லாம்சியா ஆய்வகம், 26 படுக்கைகள் கொண்ட அதிதீவிர சிகிச்சை பிரிவு, பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவு, தாய்ப்பால் வங்கி, மகப்பேறு சிகிச்சை பிரிவு, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக 4 அறுவை சிகிச்சை அரங்கம் உள்ளது. புதிய கட்டிடத்தை முதல்வர் விஜய் காணொளி வாயிலாக கடந்த 4ம் தேதி திறந்து வைத்தார். தொடர்ந்து கலெக்டர் சுகபுத்ரா தலைமையில் அமைச்சர் கீர்த்தனா அவசர சிகிச்சை பிரிவு கட்டிடத்தினை மக்களின் பயன்பாட்டிற்கு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். ஆனால் இந்த கட்டிடத்திற்கு கட்டிட நிறைவு சான்றிதழ் பெறப்படாமலேயே திறப்பு விழா நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டு பல நாட்கள் கடந்த நிலையிலும், புதிய மருத்துவமனை கட்டிடம் பயன்பாட்டிற்கு வராதது நோயாளிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அதிகாரிகளிடம் விசாரித்த போது, ரயில்வே தண்டவாளத்தையொட்டி 7 தளங்களுடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாகவும் ரயில்வே துறை அனுமதிக்கப்பட்ட விதிமுறைகளை மீறி சுமார் ஒன்றரை மீட்டர் உயரமாகக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாகவும் இதனால் ரயில்வே துறையில் அனுமதி கடிதம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். புதிய கட்டிடம் கூடுதலாக ஒன்றரை மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ளதால் ரயில் செல்லும் போது கட்டிடம் அதிர்வு ஏற்படும் என்றும் இதனால் நோயாளிகள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இருந்த போதிலும் கட்டிட உயர்வு வரம்பு தளர்வு கோரி ரயில்வே நிர்வாகத்தில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஒப்புதல் கிடைத்த பிறகு இறுதி ஒப்பதல் வழங்கப்படும் என்றும் கூறப்படுகின்றது. கட்டிடத்திற்கான இறுதி ஒப்புதல் சான்றிதழ் வழங்கப்படாததால் தனி உயர் அழுத்த மின் இணைப்பும் மின்வாரியத்தில் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் அரசு மருத்துவமனையில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள மின்சாரத்தை வைத்து புதிய கட்டிடத்திற்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் புதிய கட்டிடம் செயல்படும் போது உயர் அழுத்த மின்சாரம் வழங்கினால் மட்டுமே மின் தடையின்றி புதிய கட்டிடம் முழுமையாக இயங்கக்கூடிய நிலையும் ஏற்பட்டுள்ளது. இப்படி பல்வேறு சிக்கலில் உள்ள புதிய மருத்துவக் கட்டிடம் எப்போது முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்பதே தற்போது சிவகாசி பொதுமக்களின் முக்கிய கேள்வியாக உள்ளது.