Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

விருதுநகர், சிவகங்கை மாவட்டங்கள் இடையே 30 ஆண்டு நீடித்த எல்லை பிரச்சனை முடிவுக்கு வந்தது

திருச்சுழி, ஆக.20: விருதுநகர், சிவகங்கை மாவட்டங்கள் இடையே கடந்த 30 ஆண்டுகளாக நீடித்து வந்த எல்லை பிரச்சனை நேற்று முடிவுக்கு வந்தது. விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகேயுள்ள டி.கடமங்குளம் கிராமத்திற்கும், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள சின்னகண்ணனூர் கிராமத்திற்கும் இடையே எல்லை வரையறையில் நீண்ட காலமாக பிரச்சனை நிலவி வந்தது. குறிப்பாக விறகு வெட்டுவது தொடர்பாக இருமாவட்ட தரப்பினரிடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வந்தன. பலமுறை நில அளவீடு செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் தீர்வு எட்டப்படாமல் இருந்தது.

சமீபத்தில் இப்பிரச்சனை தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து, காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய சமரச பேச்சுவார்த்தையில், ஆக.19 அன்று நிலத்தை முழுமையாக அளவீடு செய்து எல்லை நிர்ணயிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை 7 மணி முதல் மாலை வரை விரிவான எல்லை அளவீட்டுப் பணி நடைபெற்றது. மானாமதுரை தாசில்தார் கிருஷ்ணகுமார், திருச்சுழி தாசில்தார் கருப்பசாமி, திருச்சுழி டிஎஸ்பி பிரதீப், துணை தாசில்தார் செல்வம், வருவாய் ஆய்வாளர்கள் துரைமுருகன், வினோத் குமார் மற்றும் தலைமை நில அளவையர் பாலச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் பழைய எல்லைக் கற்கள் கண்டறியப்பட்டு, நிலம் அளக்கப்பட்டது.

அளவீட்டு எல்லைக் குறியீடுகள் இரு தரப்பு மக்களுக்கும் தெளிவுபடுத்தப்பட்ட நிலையில், அதற்கு முழு சம்மதம் தெரிவித்தனர். இதன் மூலம் 30 ஆண்டுகளாக நீடித்த எல்லை பிரச்சனை முடிவுக்கு வந்ததால் கிராமமக்களும் அதிகாரிகளும் நிம்மதி அடைந்துள்ளனர்.