Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

ஒரு மாதமாக சப்ளை இல்லை பாளையம்பட்டியில் குடிநீர் பஞ்சம்: காசு கொடுத்து தாகம் தீர்க்கும் மக்கள்

அருப்புக்கோட்டை, ஜூலை 17: அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் கடும் சிரமமடைந்து வருகின்றனர். அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட புளியம்பட்டி காலனி, சங்கிலி செட்டியார் நகர், போஸ்டல் காலனி மற்றும் சிலோன் காலனி பகுதியில் சுமார் 5,000க்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர். இப்பகுதியில் பெரும்பாலும் நெசவாளர்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள் அதிகமாக உள்ளனர்.

பாளையம்பட்டியில் உள்ள வைகை கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் வைகை ஆற்றில் தண்ணீர் இல்லாத காரணத்தினால் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இப்பகுதியில் குடிநீர் வினியோகம் இல்லை. இதனால் பொதுமக்கள் ஒரு குடம் குடிநீருக்காக அலையும் சூழல் ஏற்பட்டுள்ளது. தினந்தோறும் குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய அவல நிலை உள்ளது. காலையில் வேலைக்கு செல்லும் நேரத்தில் இதுபோன்று குடிநீருக்காக அலையும் நிலை ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

முறையான பகிர்மானக் குழாய்கள் இல்லாத காரணத்தால், அருப்புக்கோட்டை நகராட்சியில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் விநியோகம் செய்யப்படுவது போல பாளையம்பட்டியில் தாமிரபரணி குடிநீர் விநியோகம் முறையாக இல்லை. குடிநீர் பிரச்சனையால் கோடை காலத்தில் பொதுமக்கள் கடுமையான இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இது குறித்து பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது. எனவே குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.