சிவகாசி, ஜூலை 17: சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல்லில் குடியிருப்புகளில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற கோரி பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் மண்டலம் 8வது வார்டில் முனியசாமிநகர் உள்ளது. இந்த நகரில் உள்ள 3 தெருக்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அதே பகுதியில் நீண்ட நாட்களாக தேங்கி இருந்தது. இதனால் அந்த பகுதியில் அதிகளவில் துர்நாற்றம் வீசி கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது. கழிவுநீரை அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தியும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகின்றது.
இந்த நிலையில் நேற்று காலை அப்பகுதி பெண்கள் திருத்தங்கல்-செங்கமலநாச்சியார்புரம் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருத்தங்கல் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கழிவுநீரை அகற்றினால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று தெரிவித்தனர். அதனை தொடர்ந்து சிவகாசி மாநகராட்சி அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சுகாதார பிரிவு ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கழிவுநீரை ஜேசிபி உதவியுடன் அகற்றும் பணி நடைபெற்றது. கழிவுநீர் தேக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு பகுதியை உடைத்து வெளியேற்றினர். பொதுமக்களின் சாலை மறியல் போராட்டத்தினால் அந்தபகுதியில் சுமார் 1 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


