வில்லிபுத்தூர், ஜூலை 17: நத்தம்பட்டியில் சென்டர் மீடியனில் கார் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சேர்வை(45). இவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு காரியாபட்டி அருகே உள்ள மருதங்குடி கோயிலுக்கு சாமி கும்பிட காரில் சென்றனர். வாகனத்தை வத்திராயிருப்பு பகுதி சேர்ந்த டிரைவர் பூபதி என்பவர் ஓட்டினார்.
கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பி வரும்போது நத்தம்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சென்டர் மீடியனில் மோதியது. இதில் டிரைவர் பூபதி, சேர்வையின் தம்பி கார்த்திக்(38) மற்றும் அங்காள ஈஸ்வரி(40) ஆகிய மூவர் பரிதாபமாக இறந்தனர். படுகாயமடைந்த சேர்வை விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து நத்தம்பட்டி விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக நத்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

