Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மேற்குத்தொடர்ச்சி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை தீவிரம்

வத்திராயிருப்பு, ஆக.14: வத்திராயிருப்பு மேற்குத்தொடர்ச்சி மலையில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் வில்லிபுத்தூர் வனப்பகுதியில் சாம்பல் நில அணில்கள் சரணாலயம் மற்றும் வில்லிபுத்தூர்- மேகமலை புலிகள் சரணாலயம் ஆகிய இரண்டு சரணாலயங்கள் இயங்கி வருகின்றன. இந்த அடர்ந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, மிளா, மான், காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. மேலும் இப்பகுதியில் பல அரிய வகை மூலிகை செடிகளும் உள்ளன.

இந்நிலையில் வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலை தூங்கா கடவு பீட் பகுதியில் காட்டுத் தீ பற்றி மளமளவென எரிந்து வருகிறது. மலைப்பகுதியில் பற்றிய தீ சரணாலய பகுதி முழுவதும் எரிந்து வருகிறது. திடீரென பற்றி எரிந்த காட்டுத் தீயால் பல அரிய வகை மூலிகைகள் பாதிப்படைவதற்கும் மற்றும் சிறிய வகை வனவிலங்குகள் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக வன ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். காற்றின் வேகம் சற்று அதிகமாக இருப்பதன் காரணமாக மலைப்பகுதியில் தீ வேகமாக பரவி வருகிறது.

பற்றி எரிந்து வரும் காட்டுத்தீயை வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சுமார் 10 க்கும் மேற்பட்டோர் அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சதுரகிரி மலைப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மலைப்பகுதியில் காட்டுத் தீ பற்றி எரியும் நிலையில் மர்ம நபர்கள் தீ வைக்கிறார்களா என வனத்துறையினர் ஆய்வு செய்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.