Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பட்டாசு வேதிப்பொருள் ஆராய்ச்சி மையம் அமைக்க பூமி பூஜை போட்டு கான்கிரீட் பில்லருடன் முடங்கிய கட்டுமான பணிகள்

சிவகாசி, ஆக. 13: சிவகாசி அருகே 3 ஆண்டுகளுக்கு மேலாக பட்டாசு வேதிப்பொருள் ஆராய்ச்சி மைய கட்டிட பணி பணிகள் கட்டி முடிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. வெடி விபத்துகளை தவிர்க்க உரிமையாளர்கள், தொழிலாளர்களை தொந்தரவு செய்யாமல் இது போன்று அறிவியல் ஆராய்சி முறையில் வெடி விபத்துகளை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிவகாசி மக்களின் கோரிக்கையாக உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் டிஆர்ஓ லைசன்ஸ், நாக்பூர் மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினரிடம் உரிய அனுமதி பெற்று 1,070 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் நேரடியாக 5 லட்சம் தொழிலாளர்களும், பட்டாசுத் தொழிலுக்குத் தேவையான காகித அட்டைப் பெட்டி உள்ளிட்டவை தயாரிக்கும் தொழில்களிலும் 3 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் தயாரிக்கப்படும் பட்டாசுகளை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லும் லாரிகள் முன்பதிவு அலுவலகங்களிலும் (லாரி செட்டுகள்), பட்டாசு சில்லறை விற்பனைக் கடைகள் மூலமும் என சுமார் ஒரு கோடி பேர் பட்டாசு தொழில் மூலம் பயனடைந்து வருகின்றனர். பட்டாசு முழுக்க முழுக்க கையால் தயாரிக்கப்படுகிறது. இந்தப் பணியில் 70 சதவீதம் பெண்கள் ஈடுபடுகின்றனர். அரசு சார்ந்து இல்லாமல் சுய வேலைவாய்ப்பை தரும் இந்தத் தொழில் குறித்து ஒன்றிய அரசு பாராமுகமாக இருப்பதாக பட்டாசு ஆலை தொழிலாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். பட்டாசு தொழில் கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு பிரச்னை சந்தித்து வருகின்றன. குறிப்பாக நடப்பாண்டு வெடி விபத்துகளும் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன.

பட்டாசு ஆலை விபத்துகளை தவிர்க்கும் வகையில் சிவகாசி அருகே தெற்கு ஆனைக்குட்டம் கிராமத்தில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை அமைச்சகம், தேசிய சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் மற்றும் டான்பாமா (பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள்) சங்கம் சார்பில் ரூ.15 கோடி மதிப்பில் பட்டாசு வேதிப்பொருள் ஆராய்ச்சி மையம் கட்டப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து கடந்த 2023ம் ஆண்டு ஜன.10ம் தேதி கட்டிடத்திற்கான பூமி பூஜை நடைபெற்றது.

3 மாதம் சொல்லி 3 வருஷம் ஆச்சு

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை அமைச்சக இயக்குனர் பிரகாஷ் மிஸ்ரா, தேசிய சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மைய இயக்குனர் ஆகியோர் காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். டான்பாமா சங்கத் தலைவர் கணேசன் நீரி தலைமை விஞ்ஞானி சாதனாராயலு ஆகியோர் பூமி பூஜை நடத்தினர். அப்போது, ‘பட்டாசு ஆராய்ச்சி மைய கட்டிடம் 5 ஏக்கர் பரப்பில் அமையும் வகையில் திட்டமிடப்படட்டது. இங்கு அனைத்து ஆய்வக வசதிகளும் ஏற்படுத்தப்படும். பசுமை பட்டாசு உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருள் ஆராய்ச்சி பணி இங்கு நடைபெறும். பட்டாசு ஆலைகளில் தயாரிக்கப்படும் பட்டாசில் புகை மாசு குறைக்கப்படும். இந்த ஆராய்ச்சி மையம் பசுமை பட்டாசு உற்பத்தி செய்யும் ஆலைகளுக்கு சான்றிதழ் வழங்கும். இதன் மூலம் எதிர்காலத்தில் பசுமை பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். பட்டாசு ஆராய்ச்சி மைய கட்டுமானப் பணிகள் உடனடியாக துவக்கப்பட்டு 3 மாதங்களில் முடிக்கப்படும்’ என ஆலை உரிமையாளர்கள் தெரிவித்திருந்தனர்.

அனைத்து வசதியும் இருக்கு

பூமி பூஜையில் கலந்து கொண்ட நீரி தலைமை விஞ்ஞானி சாதனாராயலு அப்போது கூறுகையில், ‘‘சிவகாசியில் அமைய உள்ள ஆராய்ச்சி மைய கட்டிடத்தில் பட்டாசு ஆலைகளில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் பரிசோதனை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழ் பெற்ற வேதிப்பொருட்கள் இந்தியா முழுவதிலும் உள்ள கெமிக்கல் ஆலை, மற்றும் பட்டாசு ஆலைகளில் பயன்படுத்த அனுமதிக்கபடும். இதே போல் பட்டாசு ஆலைகளில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் தரமும் பரிசோதனை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசு இல்லாத தரமான வேதிப்பொருட்களை பட்டாசு ஆலைகளில் பயன்படுத்த முடியும்.

புகை மாசில்லா பட்டாசுகள் தயாரிக்க இந்த ஆராய்ச்சி மையம் பெரிதும் உறுதுணையாக இருக்கும். ஆராய்ச்சி மைய கட்டிட பணிகள் மார்ச், 2023க்குள் கட்டி முடிக்கப்படும்’’ என தெரிவித்தார். ஆனால் ஆராய்ச்சி மைய கட்டுமான பணிகள் பூமிபூஜையுடன் கிடப்பில் போடப்பட்டது. பூமிபூஜை போட்டு 3 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. கான்கிரீட் பில்லர் எழுப்பப்பட்ட நிலையில் காட்சி பொருளாக வேதிப்பொருட்கள் ஆராய்சி மையம் காணப்படுகின்றது. பட்டாசு வெடி விபத்துகளை தவிர்க்கும் வகையில் பட்டாசு ஆராய்ச்சி மைய கட்டிட பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ரியல் நடவடிக்கைதான் தேவை

சமூக ஆர்வலர் முருகன் கூறும்போது, ‘‘பட்டாசு வெடி விபத்துகளை தவிர்க்கும் வகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கைதான் தற்போது அவசியம் ஆகின்றது. பட்டாசு வெடி விபத்து ஏற்பட்ட உடன் பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்வது, ஆலைகளை சீல் வைப்பது போன்ற நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபடாமல் வெடி விபத்துகளை தடுக்க அறிவியல் பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வெடி விபத்துகளை தடுக்க ஒன்றிய அரசு இது போன்ற ஒரு வேதிபொருட்கள் ஆராய்சி மையத்தை தொடங்கி வைத்த போதிலும், இதனை கட்டி முடிக்க அதிகாரிகள் ஏன் ஆர்வம் காட்டவில்லை என்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்த வேதிபொருட்கள் ஆராய்சி மையம் வந்தால் பெருமளவு வெடி விபத்துகளை தடுக்க முடியும். உயிரிழப்புகளும் குறைய வாய்ப்புகள் உள்ளன.

சங்கங்களை சமத்துவமாக நடத்துங்க..

சமூக ஆர்வலர் செல்லத்துரை கூறும்போது, ‘‘இந்த பட்டாசு தொழிலில் ஆண்டுதோறும் வெடி விபத்துகள் நடப்பதும் உயிரிழப்புகள் நடப்பதும் வாடிக்கையாக உள்ளது. பட்டாசு வெடி விபத்துகளை தடுக்கும் வகையில் அதிகாரிகள் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுப்பது அவசியம். மாவட்ட நிர்வாகம் சார்பாக நடைபெறும் ஆலோசனைக் கூட்டம் மற்றும் கலந்தாய்வு கூட்டங்களுக்கு பாரபட்சமின்றி டிஆர்ஓ லைசன்ஸ் ஆலை உரிமையாளர்களும் நாக்பூர் லைசன்ஸ் உரிமையாளர்களும் அழைக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட சங்க நிர்வாகிகளை மட்டும் அழைத்து ஆலோசனை நடத்தினால் மற்ற சங்க நிர்வாகிகள், ஆலை உரிமையாளர்கள் தங்களது குறைகளை எடுத்து கூற வாய்ப்பு கிடைக்காமல் ஏமாற்றம் அடைகின்றனர். எனவே இனி வரும் காலங்களில் அரசு நடத்தும் ஆலைசனைக்கூட்டங்களில் அனைத்து சங்கங்களுக்கும் முறையாக அழைப்பு விட வேண்டும் எற்த ஒரு தகவலும் அனைத்து‘ சங்க நிர்வாகிகளுக்கும் அனைத்து பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கும் தெரியபடுத்த வேண்டும்.’’ என்றார்.