Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

விதை விநியோகத்தில் தாமதம் வேளாண் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

காரியாபட்டி, ஆக. 12: காரியாபட்டி, ஆவியூர், அரசகுளம், குரண்டி, மாங்குளம், மேலக்கள்ளங்குளம், நாசர் புளியங்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தற்போது நிலக்கடலை விதைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இப்பகுதிக்கு வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் இல்லாததால் அரசு சார்பில் மானிய விலையில் வழங்கப்பட வேண்டிய கடலை விதைகள் உரிய நேரத்தில் கிடைக்கவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறைக்கு இடையே நிலவும் நிர்வாக ரீதியான பிரச்னை மற்றும் ஒருங்கிணைப்பு இல்லாததே விதை தட்டுப்பாட்டுக்கு காரணம் என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். பருவமழை தொடங்குவதற்கு முன்பாக விதைப்புப் பணிகளை முடித்தால்தான் எதிர்பார்த்த மகசூலை பெற முடியும். ஆனால், விதை விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் சாகுபடி பருவம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதனை கண்டித்து, விவசாயிகள் காரியாபட்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வேளாண்மை துறை அதிகாரிகள் மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.இதனை தொடர்ந்து அதிகாரிகளிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். அந்த மனுவில், காரியாபட்டி வட்டாரத்திற்கு வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை எந்த துறை பொறுப்பு என்பதில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். வட்டாரத்தின் மொத்த விதைத் தேவையை கணக்கிட்டு போதுமான விதைகளை இருப்பில் வைக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு கடலை விதைகள் மற்றும் மானிய விலையில் கிடைக்கக்கூடிய உரங்களை தடையின்றி உரிய காலத்தில் வழங்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டது. மேலும், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இரு துறைகளுக்கும் இடையேயான பிரச்னையை தீர்த்து, காரியாபட்டி பகுதிக்கென தனி அலுவலரை நியமித்து விதை மற்றும் உர விநியோகத்தை கண்காணிக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.