விருதுநகர், மே. 7: விருதுநகர் மெட்டுக் குண்டு பகுதியில் கோடை காலத்தில் கேந்தி பூக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, காரியாபட்டி முதலான ஊராட்சி பகுதிகளில் மல்லி, கேந்தி பூக்கள் விவசாயம் செய்யப்படும். தற்போது கோடை காலம் என்பதால், பூக்கள் விவசாயம் பெரிய அளவில் இல்லை. இதனால் பூக்களின் வரத்து விருதுநகர் மார்க்கெட்டிற்கு குறைந்துள்ளது.
இந்த நிலையில் விருதுநகர் அருகே அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மெட்டுக்குண்டு பகுதியில் மோட்டார் பாசனத்தில் கேந்தி பூக்கள் விவசாயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு ஏக்கரில் கேந்தி பூ விவசாயம் மேற்கொள்ள உழவு, களை எடுத்தல், உரமிடுதல், மருந்து அடித்தல், தண்ணீர் பாய்ச்சுதல் முதலானவற்றிற்கு சுமார் ரூ.20 ஆயிரம் வரை விவசாயிகள் செலவு செய்துள்ளனர். தற்போது மகசூலுக்கு வந்துள்ள கேந்தி பூக்கள், விருதுநகர் மார்க்கெட்டில் தரத்தைப் பொறுத்து ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது. கூடுதல் விலைக்கு வியாபாரிகள் கொள்முதல் செய்தால் லாபம் கிடைக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.



