Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

காரியாபட்டியில் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம்

காரியாபட்டி, மே 7: காரியாபட்டியில் தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. இப்பகுதி மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருப்பதால் குடியிருப்புகள் அதிகரித்து நகர்ப்பகுதி விரிவாக்கம் அடைந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு என்ஜிஓ நகர் பகுதியில் உள்ள அய்யாதுரை என்பவர் வீட்டில் உள்ள வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.

இந்நிலையில் காரியாபட்டி கள்ளிக்குடி சாலையில் மின்வாரிய அலுவலகம் முன்பு சக்திவேல் என்பவர் குடியிருந்து வருகிறார். தற்போது அவர் வெளிநாட்டில் உள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு பூட்டிக்கிடந்த இரவு வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், அங்கிருந்த பீரோவை உடைத்துள்ளனர்.

ஆனால் விலை உயர்ந்த பொருட்கள் ஏதும் இல்லாதததால், அங்கிருந்து சென்று விட்டனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், சம்பவம் நடந்த வீட்டினை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், காரியாபட்டியில் கடந்த சில நாட்களாக திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. ஆளில்லாத வீடுகளில் புகுந்து மர்மநபர்கள் பொருட்களை திருடி செல்கின்றனர். தற்போது கோடை விடுமுறை காலமாக இருப்பதால் மர்ம நபர்கள் காலை நேரத்தில் ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு இரவு நேரங்களில் தங்கள் கைவரிசையை காட்டி வருகின்றனர்.

பல இடங்களில் இது போன்ற திருட்டு சம்பவங்கள் நடந்தாலும் பாதிக்கப்பட்ட மக்கள் காவல் நிலையத்தில் சென்று புகார் கொடுக்காமல் விட்டு விடுகின்றனர். இதனால் திருட்டு சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. எனவே இரவு நேரங்களில் போலீசார், ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றனர்.