அம்மன் கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
விழுப்புரம், நவ. 15: கும்பாபிஷேகம் நடந்த கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி விடுகின்றனர். விழுப்புரம் நாராயணன் நகரில் ஆதிபராசக்தி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பூஜை முடிந்து பூட்டிவிட்டு சென்றுள்ளனர். நேற்று காலை சுத்தம் செய்வதற்காக ஊழியர்கள் சென்றபோது, கோயில் வளாகத்தின் முன் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அதில், கோயில் மதில் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்றுள்ளது தெரியவந்தது. உண்டியல் திருட்டில் ஈடுபட்டது யார் என்பது குறித்து அப்பகுதியில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கோயிலில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் கும்பாபிஷேகம் நடந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.