புதுவை காண்டிராக்டரிடம் ரூ.2.49 கோடி மோசடி
புதுச்சேரி, நவ. 15: புதுச்சேரி காண்டிராக்டரிடம் பங்கு சந்தையில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் எனக்கூறி ரூ.2.49 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி ஜி.என்.பாளையம் பகுதியை சேர்ந்த நபர், கட்டுமான காண்டிராக்டர் மற்றும் காப்பீடு நிறுவன ஏஜெண்டாக பணியாற்றி வருகிறார். இவரை, மர்ம நபர் அவரது வாட்ஸ் அப் குரூப்பில் இணைத்துள்ளார். பின்னர், அந்த குரூப்பில் பங்குசந்தையில் எவ்வாறு முதலீடு ெசய்வது பணம் சம்பாதிப்பது என்பது குறித்து விளக்கப்பட்டது.
இதனை நம்பிய மேற்கூறிய நபர், பல்வேறு தவணைகளில் ரூ.2.49 கோடி முதலீடு செய்துள்ளார். பின்னர், அதில் கிடைத்த லாபத்தை மேற்கூறிய நபரால் எடுக்க முடியவில்லை. இது குறித்து மர்ம நபரிடம் கேட்டபோது, கிடைத்த லாபத்தை எடுக்க கூடுதல் பணம் செலுத்துமாறு கூறியுள்ளார். அதன்பிறகே அவர் மோசடி கும்பலிடம் ஏமாந்ததை உணர்ந்தார். இதேபோல், புதுவை நைனார்மண்டபம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு ஆர்.டி.ஓ இ-சலான் செயலி வாட்ஸ் அப்பில் வந்துள்ளது.
இதனை உண்மை என நம்பி மேற்கூறிய நபர் அந்த செயலியை பதிவிறக்கம் செய்த சிறிது நேரத்தில், அவரது வங்கி கணக்கிலிருந்து ரூ.2.30 லட்சம் காணாமல் போனது. புதுவை முதலியார்பேட்டையை சேர்ந்த ஆண் நபர் ஒருவர் ரூ.1.84 லட்சம், செட்டிபேட் பகுதியை சேர்ந்த பெண் ரூ.45 ஆயிரம், மூலகுளம் பகுதியை சேர்ந்த பெண் ரூ.42 ஆயிரம், தட்டாஞ்சாவடியை சேர்ந்த ஆண் நபர் ரூ.40 ஆயிரம், புதுவையை சேர்ந்த பெண் ரூ.64 ஆயிரம், மூலகுளத்தை சேர்ந்த ஆண் நபர் ரூ.32 ஆயிரம் மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளனர். மேற்கூறிய 8 பேரும் தனித்தனியாக புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.