அமைச்சர் மரியவில்சன் மீதான வழக்கு: இடைக்கால தடை 12ம் தேதி வரை நீட்டித்து புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவு
புதுச்சேரி, செப். 30: புதுச்சேரியில் தமிழக அமைச்சர் மரியவில்சன் மீதான வழக்கை விசாரிக்க விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை, வரும் அக்டோபர் 12ம் தேதி வரை நீட்டித்து புதுச்சேரி தலைமை நீதிபதி ஆனந்த் உத்தரவிட்டுள்ளார். கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி, புதுச்சேரி எழில் நகரில் வசித்து வரும் அமைச்சர் மரியவில்சனின் சகோதரர் மரிய குளோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று, அவரையும் அவரது மனைவி கெரோலினையும் தாக்கியதாக லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கு புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் சேரலாதன், மாகே மாவட்ட முன்சீப் மற்றும் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டாக மாற்றப்பட்டார். இதையடுத்து, முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் இல்லாததால், அங்கு நடைபெற வேண்டிய விசாரணைகள் இரண்டாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சந்திரசேகர் முன்னிலையில் நடந்து வருகிறது.
இந்நிலையில், மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள முதலாவது குற்றவியல் நீதிமன்ற வழக்கை, வேறு நீதிமன்றமான இரண்டாவது குற்றவியல் நீதிபதி விசாரிக்ககூடாது எனக்கூறி, அமைச்சர் மரியவில்சன் தரப்பில் புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த், வழக்கு விசாரணையை முதலில் 18ம் தேதிக்கும், பின்னர் 25ம் தேதிக்கும், அதன்பின் 29ம் தேதிக்கும் ஒத்திவைத்திருந்தார். இந்நிலையில், வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் தரப்பின் மனு மீதான விசாரணை முடியும் வரை, கீழமை நீதிமன்றத்தில் வழக்கை விசாரிப்பதற்கான இடைக்கால தடையை அக்டோபர் 12ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.


