புதுச்சேரி, செப். 30: தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சிகள் வீழ்த்தப்பட்டதற்கு எஸ்ஐஆர் தான் காரணமாக இருந்ததை உறுதியாக நம்புகிறோம் என விசிக எம்பி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். புதுச்சேரி விசிக சார்பில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி அண்ணா சாலையில் நேற்று நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ரவிக்குமார் எம்.பி கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்.
பின்னர் ரவிக்குமார் எம்பி கூறுகையில், எஸ்ஐஆர் நடவடிக்கைகளை அறிவித்த தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும். எஸ்ஐஆர் ஐ சட்ட விரோதம் என்று அறிவிக்க வேண்டும். இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறுகிறது. இதில் நானும் எனது தலைவரும் பங்கேற்க உள்ளோம்.
ஸ்டாலின், கெஜ்ரிவால், மம்தா தோல்விக்கு பின்னால் எஸ்ஐஆர் இருக்கின்றதோ இல்லையோ ஆனால் எஸ்.ஐ.ஆர் பிறகு நடந்த மாநில தேர்தல்களில் பாஜக அரசுக்கு எதிரான கட்சிகள் வீழ்த்தப்பட்டதற்கு எஸ்ஐஆர் தான் காரணமாகும். அதுபோல் திமுக கூட்டணி கட்சிகள் வீழ்த்தப்பட்டதற்கும் எஸ்ஐஆர் தான் காரணம் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என தெரிவித்தார்.
தொடர்ந்து அமைச்சர் ராஜ்மோகன் எஸ்.ஐ.ஆர் தொடர்பாக தவெக விற்கு உடன்பாடு இல்லை என பேசியது தொடர்பாக கேள்விக்கு பதிலளித்த அவர், எஸ் ஐ ஆரில் உடன்பாடு இல்லை என ராஜ்மோகன் கூறவில்லை. தேர்தல் ஆணையரை மட்டும் பதவி விலக சொல்வது பிரச்னை திசை திருப்புவதாக சொல்கிறார். குறிப்பாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவித்த போராட்டத்தை குறித்து அவர் சொல்லி இருக்கலாம். இந்தியா கூட்டணியுடன் நிலைப்பாடு நாளை அறிவிக்கப்படும். அதன் பிறகு தவெக தனது ஆதரவின் நிலையை அறிவிக்கும் என எதிர்பார்க்கிறேன்.
தவெக தற்போது ஒரு மைனாரிட்டி அரசாக உள்ளது. மெஜாரிட்டியாக இருந்த தமிழகம், கேரளா, மேற்குவங்கம் அரசை பாஜக எவ்வளவு பாடுபடுத்தினார்கள் என அனைவருக்கும் தெரியும். பாஜக எதிர்ப்பில் தவெக பேச்சை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டாம், அவர்கள் நடவடிக்கையும் பார்க்க வேண்டும். வருகின்ற 1ம் தேதி தவெக உடன் உள்ள கூட்டணி கட்சிகள் மதுராந்தகத்தில் பிரசார கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளோம்.
யாராக இருந்தாலும் பிரச்சாரத்தில் கண்ணியத்தோடு பொதுக்கூட்ட மேடைகளில் பேச வேண்டும் இன்றைக்கு கைத்தட்டல்கள் வருகிறது என்பதற்காக பேச ஆரம்பித்தால் அரசியல் சூழலே மாறிவிடும், என்றார். மேலும் உதயநிதி சோபா மாடல் கூட்டணி என்று ஒவ்வொரு பிரசாரத்திலும் பேசுவது குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதில் அளிக்காமல் ரவிக்குமார் சென்றார்.

