Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

தமிழக நிதியமைச்சர் மீதான வழக்கு 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு

புதுச்சேரி, செப். 26: தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன், கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி புதுச்சேரி எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோதரர் மரிய குளோத் வீட்டுக்குள் நுழைந்து அவரையும், அவரது மனைவி கேரலினையும் தாக்கியதாக லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்‌. இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இதனிடையே, கடந்த 4ம் தேதி புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராகி குற்றப்பத்திரிகை நகலை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி சந்திரசேகர் (பொறுப்பு) முன் கடந்த 11ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, 21ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

அன்றைய தினம் மாலை புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் மரிய வில்சன் தரப்பு வழக்கறிஞர் அஜித்குமார், நீதித்துறை நடுவர் மன்றம் எண் 1ல் தான் மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிக்க முடியும். வேறு நீதிமன்றங்களில் நடத்த முடியாது. அதனால் இங்கு விசாரணை நடக்கக்கூடாது என்று மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஆனந்த், இவ்வழக்கை விசாரிக்க செப்டம்பர் 25ம் தேதி வரை இடைக்கால தடை விதித்தார்.

இந்நிலையில், இம்மனு மீதான விசாரணை புதுச்சேரி முதன்மை அமர்வு தலைமை நீதிபதி ஆனந்த் முன் நேற்று காலை வந்தது. தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் தரப்பு வழக்கறிஞர் அஜித்குமார் மற்றும் அரசு தரப்பில் வழக்கறிஞர் லோகேஷ்வரன் ஆகியோர் ஆஜராகினர். இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த தலைமை நீதிபதி ஆனந்த், இவ்வழக்கை வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.