மங்கலம்பேட்டை, செப். 25: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பொன்னாலகரம் சுங்கச்சாவடி பகுதியில், ஊ.மங்கலம் காவல் உதவி ஆய்வாளர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக, வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் ஹான்ஸ் போன்ற போதை பொருட்களை விற்பனைக்காக கடத்தி வந்தது தெரியவந்தது. அதையடுத்து காரை பறிமுதல் செய்து, காரில் வந்த மூவரை கைது செய்து, விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம், ஓடைக்காடு, பெரியசாமி மகன் செந்தில்குமார் (47), ஆத்தூர் வட்டம், சிவசங்கராபுரம், நடுத்தெரு, காமராஜ் மகன் இளங்கோ (27), குறிஞ்சிப்பாடி அடுத்த மேட்டுக்குப்பம், சின்னதுரை மகன் சந்திரகாசன் (43) என்பதும், அவர்கள் விற்பனைக்காக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் காரில் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 85 கிலோ போதைப் பொருட்கள் மற்றும் காரையும் பறிமுதல செய்தனர்.


