சங்கராபுரம், செப். 23: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வடசெட்டியந்தல் கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் நேற்று சங்கராபுரம்-மஞ்சபுத்தூர் சாலையில் அந்த வழியாக வந்த அரசு பேருந்தை திடீரென சிறைபிடித்து காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சங்கராபுரம் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து கிராம நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு குடிநீர் வழங்க கூறியதை தொடர்ந்து உடனடியாக அப்பகுதியில் குடிநீர் வழங்கப்பட்டது. இதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


