சிதம்பரம், அக். 22: சிதம்பரம் பழைய புவனகிரி ரோட்டில் நேற்று நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் முருகன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இளைஞர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் அவர்கள், சிதம்பரம் கலைஞர் காலனியை சேர்ந்த செந்தில் வேலன் மகன் விஷ்வா (26), சிதம்பரம் அடுத்துள்ள வேலக்குடி பழையநல்லூரை சேர்ந்த செல்வகுமார் மகன் ஜெயசீலன் (22), சிதம்பரம் சகஜானந்தர் தெருவை சேர்ந்த பாண்டியன் மகன் புவனேந்திரராஜா (22), சிதம்பரம் அடுத்துள்ள ஆடூர், சிவன் கோயில் தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் செல்வம் (22), சிதம்பரம் செங்கட்டான் தெருவை சேர்ந்த தமிழரசன் மகன் ஆதித்யாவாசவன் (18), லால்புரம் மணலூரை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும், இவர்கள் விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 6 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். அதில், 17 வயது சிறுவனை கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து சுமார் 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மங்கலம்பேட்டை: விருத்தாசலம் வட்டம், மங்கலம்பேட்டை அருகே உள்ள காட்டுப்பரூர் கிராமம்,
தெற்கு தெருவில் வசித்து வரும் ஜெயபால் மகன் விஜயகுமார் (22), மு.அகரம், புது காலனியில் வசிக்கும் பழனிவேல் மகன் குணா (18), கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், பில்லூர் கிராமம், புதுத்தெருவில் வசிக்கும் கொங்கராயன் மகன் கவுதம் (19) ஆகிய மூவரும் நேற்று காலை மங்கலம்பேட்டை மங்களநாயகி அம்மன் கோயில் குளம் அருகே சந்தேகப்படும் வகையில் கூடியிருந்தனர்.
அப்போது அவ்வழியே ரோந்து சென்ற போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தபோது அவர்கள் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து சுமார் 45 கிராம் அளவுள்ள கஞ்சாவை கைப்பற்றினர். மேலும் அவர்கள் மூவரையும் கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்று வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மூவருக்கும் கஞ்சா வாங்கி வந்து கொடுத்ததாக விருத்தாசலம் அருகேயுள்ள பரவலூர் கிராமம் நடத்திட்டு பகுதியை சேர்ந்த அசோக் குமார் மகன் விஷ்வா (25) என்பவரையும் கைது செய்தனர். இவர்கள் 4 பேரிடமும் இருந்து மொத்தம் 55 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்த காவல் ஆய்வாளர் பழனிச்சாமி இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.


