விருத்தாசலம், அக். 22: விருத்தாசலம் அருகே டிரைவர் செல்போன் பேசியபடி கவனக்குறைவாக பஸ்சை ஓட்டியதால், தடுப்புக்கட்டையில் மோதி விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த தொழுதூரில் இருந்து விருத்தாசலம் நோக்கி நேற்று காலை ஒரு தனியார் பேருந்து புறப்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். பேருந்து கருவேப்பிலங்குறிச்சி அருகே சென்று கொண்டிருந்தபோது, டிரைவரின் செல்போனுக்கு அழைப்பு வந்துள்ளது.
இதையடுத்து அவர் பஸ்சை ஓட்டிக்கொண்டே செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது. இதில் டிரைவரின் கவனம் சிதறியதால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த தடுப்புக்கட்டையில் பலமாக மோதி நின்றது. பேருந்தினுள் இருந்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.விபத்து நேரிட்ட உடனே டிரைவர் பேருந்தில் இருந்து கீழே இறங்கி அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார்.
சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் பொதுமக்கள், காயமடைந்த பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் விபத்துக்குள்ளான பேருந்தை அப்புறப்படுத்தி காவல் நிலையம் கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.


