செஞ்சி, ஆக. 21: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ் துறை பேராசிரியர் முனைவர் சுதாகர், தனது ஆய்வு மாணவர்களான முகில், ஈசாக் ஆகியோருடன் செஞ்சி அருகே உள்ள பெருங்காப்பூர் கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது மலையடிவாரத்தில் உள்ள மாந்தோப்பின் நடுவில் கொற்றவை சிற்பம் ஒன்றை கண்டெடுத்தனர். இதை தொடர்ந்து பேராசிரியர் சுதாகர் கூறும்போது, உள்ளூர் மக்கள் இச்சிற்பத்தை காளியாக வழிபட்டு வருகின்றனர்.
சிற்பம் சுமார் 5 அடி உயரம், 3 அடி அகலம் கொண்டதாக உள்ளது. நின்ற கோலத்தில் காணப்படும் இச்சிற்பம் கிபி 8ம் நூற்றாண்டு பல்லவர் காலத்தை சார்ந்ததாகும். நான்கு கைகளுடன் தலையில் அலங்கரிக்கப்பட்ட கவசமும், காதுகளில் கொண்டாலமும், இடுப்பில் ஒட்டியாணம், முழு ஆடையுடன், எருமை மாட்டின் தலையின் மீது சமபங்கத்தில் நின்று காணப்படுகிறது.
தொண்டை நாட்டு பகுதியில் இது போன்ற கொற்றவை சிற்பம் பரவலாக காணப்படுவது அதிகமாக உள்ளது. இருப்பினும் இப்பகுதியில் கொற்றவை வழிபாடு பழங்காலம் முதலே இருந்துள்ளது. கிராமப்புறங்களில் கொற்றவை வழிபாடு, பலியிடும் தெய்வமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இச்சிற்பம் ஒரே கல்லில் அழகாக வடிவமைக்கப்பட்டு செதுக்கப்பட்டுள்ளது, என்றார்.


