திண்டிவனம், ஆக. 21: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள நடுவனந்தல் கிராம எல்லை அருகே கடந்த 2021ம் ஆண்டு டாஸ்மாக் திறக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து கடை மூடப்பட்டது. இந்நிலையில் தற்போது 3 நாட்களுக்கு முன் பொதுமக்கள் எதிர்ப்பை மீறி டாஸ்மாக் கடை திறக்க முடிவெடுக்கப்பட்டது. இதற்காக ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் காலை கடையை திறக்க ஏற்பாடு செய்த நிலையில் மீண்டும் 20க்கும் மேற்பட்டோர், போராட்டத்தில் ஈடுபட்டு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மறுபுறம் நடுவனந்தல், புதூர், காட்டுச்சிவிரி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மதுபிரியர்கள் கடையை திறக்க கோரி திரண்டனர். இதையடுத்து கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்த 15க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் லாரியில் மதுபாட்டில்களை கொண்டு வரப்பட்டு, கடை திறக்கப்பட்டது. இதை கண்ட மதுபிரியர்கள் கைதட்டி வரவேற்றனர். வெள்ளிமேடுபேட்டை இன்ஸ்பெக்டர் ரெஜினா, ஒலக்கூர் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தராசன், செந்தில்முருகன் ஆகியோர் அடங்கிய 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் மது விற்பனை நடைபெற்றது.
இந்நிலையில் நேற்று 3வது நாளாக 15க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வழக்கறிஞர் சரவணன் தலைமையில் கடையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


