புவனகிரி, ஆக. 21: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அலகுடி பகுதியை சேர்ந்தவர் கோபி(45), விவசாயி. இவருக்கு மனைவி சுதா, மகன் ஹரிநாத், மகள் சுவேதா ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் கோபி கடந்த சில நாட்களுக்கு முன் சிதம்பரம் கீழ சன்னதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இடுப்பு வலி காரணமாக சிகிச்சைக்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த மருத்துவர்கள் கோபிக்கு சிகிச்சை அளித்துள்ளனர். தொடர்ந்து கோபிக்கு இடுப்பில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர் கூறியதாக தெரிகிறது.
இதை தொடர்ந்து நேற்று முன்தினம் கோபி கீழ சன்னதியில் உள்ள மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது அங்கு கோபிக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். தொடர்ந்து மாலையில் கண்விழித்து பார்த்த கோபிக்கு, இடுப்பில் பயங்கர வலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதை தொடர்ந்து மருத்துவர்கள், அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கோபியை அழைத்து சென்றனர்.
அங்கு அவரை சோதித்த மருத்துவர்கள், கோபி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த கோபியின் உறவினர்கள் நேற்று கீழ சன்னதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று அங்கிருந்த மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் பிரதான சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
தவறான சிகிச்சையால் கோபி இறந்துள்ளார். அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த சிதம்பரம் நகர போலீசார், போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். சுமார் 1 மணி நேரம் நடந்த சாலை மறியல் போராட்டத்தால் கீழ சன்னதி பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


