புதுச்சேரி, ஆக. 20: போக்குவரத்துத்துறை பெயரில் போலி அபராதம் ஆவணத்தை அனுப்பி ரூ.3.87 லட்சம் ஆன்லைன் மோசடி செய்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி லாஸ்பேட் பெத்துசெட்டிபேட் பகுதியை சேர்ந்தவர் பாலன் (62). இவர் புதுச்சேரி நேரு வீதியில் உள்ள தனியார் ஜவுளிக்கடையில் காசாளராக பணியாற்றி வருகிறார். இவரது வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதில், தங்களுடைய வாகனம் அடிக்கடி போக்குவரத்து விதிமீறலுக்கு ஆளாகி உள்ளது. எனவே, உங்களுக்கு ஆயிரக்கணக்கில் அதிகப்படியான அபராத தொகை புதுச்சேரி போக்குவரத்துத்துறை விதித்துள்ளது. எனவே, இந்த செயலி மூலம் ரூ.1000 செலுத்தினால், உங்களது மொத்த அபராத தொகையும் தள்ளுபடி செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைநம்பி பாலன் அந்த செயலின் இணைப்பை அழுத்திய போது சிறிது நேரத்தில், அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.3.87 லட்சம் மாயமானது.
இதனை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். புதுச்சேரி போக்குவரத்துத்துறை பெயரில் போலி அபராத ஆவணத்தை அனுப்பி ஆன்லைன் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து பாலன் சைபர் கிரைம் இணையதளத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் இ- ஜீரோ எப்.ஐ.ஆர் பதிந்து, வழக்கு லாஸ்பேட்டை காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு வழக்குபதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


