திண்டிவனம், ஆக. 20: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கந்தாடு கிராமத்தை சேர்ந்த மகளிர் அணி நிர்வாகி நதியா(39) நிருபர்களிடம் கூறியதாவது: தவெக கட்சியின் வளர்ச்சிக்கு தீவிரமாகச் செயல்பட்டதால் வேலையில் இருந்து நீக்கப்பட்டேன். ஆனாலும் சொந்த பணம் ரூ.2 லட்சம் வரை செலவு செய்து கட்சியை வளர்த்த எனக்கு எவ்வித அங்கீகாரமும் இல்லை. விஜய் நடித்த படத்தை வரவேற்று மகளிர் அணி அமைப்பாளர் என்று போஸ்டர் அடித்தேன்.
அதற்கு தவெக வடக்கு மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் நீ ஏன் போஸ்டர் போடுகிறாய்? எதுக்கு போடுகிறாய்? உன்னை யார் செயல்பட சொன்னது? நீ செயல்படக் கூடாது எனக்கூறி தொல்லைக்கொடுத்தார். இது தொடர்பான புகாரில் பனையூரில் நடந்த விசாரணை எனக்குத் திருப்தியாக இல்லை. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவள். என் குழந்தை இறந்த துக்கத்தை கூட மறைத்துக்கொண்டு, தேர்தல் வேலை செய்தேன்.
எப்போது பார்த்தாலும் கட்சிப் பணி செய்யக் கூடாது என மாவட்ட செயலாளர் சக்திவேல் மிரட்டுகிறார். கட்சி தலைவர் விஜய் என்னை நேரில் அழைத்து விசாரித்து நல்ல முடிவை எடுக்க வேண்டும். சக்திவேலுக்கு நெருக்கமானால் தான் பதவி கொடுப்பார்கள். மேலும் நான் அதற்கு இணங்கவில்லை. ஆனால் வெளியே எல்லோர் மத்தியிலும் என்னை ஏன்? உரசி, உரசி வருகிறாய் என்று கேட்கிறார். இது குறித்து எனது கணவர் புகாரைக்கூட முறையாக விசாரிக்கவில்லை.
இது குறித்து முதல்வர் விஜய்தான் விசாரணை நடத்த வேண்டும். என்னை மிரட்டுகிறார்கள். பதவியை விட்டு நீக்கிவிடுவேன், என்னை பகைத்து கொண்டால் நீ வாழ முடியாது என்று சக்திவேல் மிரட்டுகிறார். என்னால் இனிமேல் தனியாக போராட முடியாது. எனக்காக விஜய்தான் நல்ல முடிவை கூற வேண்டும். என்னை அவரிடமிருந்து காப்பாற்ற வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.


