கடலூர், மே 18: கடலூர் பாதிரிக்குப்பம் அடுத்த குமாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(38). இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் சம்பவத்தன்று தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூருக்கு சென்றார். பின்னர் நள்ளிரவு வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து துணிமணிகள் அனைத்தும் சிதறி கிடந்தன.
மேலும் பீரோவில் வைத்திருந்த 4.5 பவுன் மற்றும் 640 கிராம் வெள்ளி பொருட்களை காணவில்லை. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது சந்தோஷ்குமார் குடும்பத்துடன் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து நகைகளை திருடியுள்ளனர். இது குறித்து சந்தோஷ்குமார், திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


