புதுச்சேரி, மே 18: புதுச்சேரியில் ஆன்லைனில் 7 பேரிடம் ரூ.2.07 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி மூலகுளம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு, வங்கியில் இருந்து குறுந்தகவல் வந்தது. அதில், ரிவார்டு பாயிண்ட் பயன்படுத்த, கார்டு விவரம் மற்றும் ஓடிபி எண்ணை பகிருமாறு கூறப்பட்டுள்ளது. இதனை உண்மை என நம்பிய மேற்கூறிய பெண் விவரங்களை வழங்கிய சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கிலிருந்த ரூ.52 ஆயிரம் காணாமல் போனது.
புதுவை திருக்கனூரை சேர்ந்த ஆண் நபரை, மர்ம நபர் ஒருவர் தொடர்புகொண்டு பைனான்சில் இருந்து பேசுவதாகவும், காப்பீடு தொகை புதுப்பிக்க பணம் கட்டுமாறும் கூறியுள்ளார். இதனை நம்பி மேற்கூறிய நபர் ரூ.45 ஆயிரத்தை அனுப்பி மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார்.
புதுவை வேல்ராம்பேட் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் ரூ.40 ஆயிரம், வில்லியனூரை சேர்ந்த ஆண் நபர் ரூ.12 ஆயிரம், ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த பெண் ரூ.14 ஆயிரம், நைனார்மண்டபம் பகுதியை சேர்ந்த ஆண் நபர் ரூ.33 ஆயிரம், கோவிந்தசாலையை சேர்ந்த ஆண் நபர் ரூ.10 ஆயிரம் என மோசடி கும்பலிடம் இழந்துள்ளனர். மேற்கூறிய நபர்கள் மொத்தமாக ரூ.2.07 லட்சத்தை மோசடி கும்பலிடம் இழந்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


