காலாப்பட்டு, மே 18: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மண்டவாய் புதுக்குப்பம் அடுத்த ஆலம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சேஷாத்ரி மகன் சிலம்பரசன்(29). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவருக்கு கையில் அடிபட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதற்காக இவருக்கு மாவு கட்டு போடுவதற்காக நேற்று அதிகாலை 4 மணியளவில் புதுச்சேரி அபிஷேகப்பாக்கம் பகுதிக்கு சிலம்பரசனின் அக்கா கணவர் ஸ்டாலின்(37) மற்றும் மற்றொரு அக்கா கணவர் காலாப்பட்டு கணபதிசெட்டிக்குளம் தனியார் மருத்துவமனை அருகில் டீ கடை நடத்தி வரும் கார்த்திகேயன்(33) ஆகியோர் புதுவை நோக்கி ஒரே ஸ்கூட்டரில் வந்தனர்.
பெரியமுதலியார்சாவடியில் உள்ள கலால் சோதனை சாவடி அருகே வந்தபோது, இவர்களுக்கு பின்னால் வந்த தமிழ்நாடு அரசு விரைவு சொகுசு பேருந்து, முன்னால் சென்று கொண்டிருந்த கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் இடது பகுதியில் இருந்த ஒரு காலி மனையில் புகுந்தது. கார் மீது மோதிய வேகத்தில் தொடர்ந்து ஸ்டாலின் ஓட்டி வந்த ஸ்கூட்டர் மீது பேருந்து மோதியது. இதில் ஸ்கூட்டரில் வந்த 3 பேரும் பேருந்தின் அடியில் சிக்கி சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டதில் 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து பேருந்தை ஓட்டி வந்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முருகேஸ்வரன்(30) என்பவர் சாலையில் பேருந்தை நிறுத்திவிட்டு தப்பி சென்று, புதுவை உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தார். தகவல் அறிந்த கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து 3 பேரின் சடலத்தை மீட்டு புதுச்சேரி கனகசெட்டிக்குளம் தனியார் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பேருந்து மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த ஐதராபாத்தை சேர்ந்த ஐடி ஊழியர்கள் 5 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தால் சென்னை- புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து தொடர்பாக கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


