Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பெண்ணாடத்தில் பரபரப்பு: 2 வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு: மர்ம நபர்களுக்கு வலை

விருத்தாசலம், ஆக. 14: இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து பணம், வெள்ளி பொருட்கள் மற்றும் கைக்கடிகாரங்களை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருத்தாசலம் அடுத்த பெண்ணாடம் பேரூராட்சிக்கு உட்பட்ட தி.அகரம் கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மனைவி மங்கையர்க்கரசி(54), விவசாயி. இவர் கடந்த 12ம் தேதி குடும்பத்துடன் ஆவினங்குடி அருகே உள்ள மேலூரில் உள்ள தனது மகள் வீட்டிற்குச் சென்றிருந்தார்.

நேற்று முன்தினம் காலை வீட்டிற்குத் திரும்பியபோது, வீட்டின் முன்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்தன. அதில் வைத்திருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கம், 4 வெள்ளி மோதிரங்கள், ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பட்டுப்புடவை, 2 வெளிநாட்டு டார்ச் லைட்டுகள் மற்றும் 3 கைக்கடிகாரங்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதேபோன்று, அதே பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் என்பவரது மனைவி வீரம்மாள்(75) வீட்டிலும் திருட்டு நடந்துள்ளது. கணவர் இறந்த நிலையில் தனியாக வசித்து வரும் வீரம்மாள், நேற்று முன்தினம் இரவு பக்கத்து வீட்டில் தூங்க சென்றுள்ளார். இதனைப் பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள், அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து ரூ.2 ஆயிரம் ரொக்கப் பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து மங்கையர்க்கரசி மற்றும் வீரம்மாள் கொடுத்த புகாரின் பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.