புவனகிரி, ஆக. 12: பரங்கிப்பேட்டை அருகே உள்ள தீத்தாம்பாளையம் கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோயிலில் நேற்று ஆடிமாத திருவிழா நடந்தது. இந்த திருவிழாவின்போது, வாண வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. இதில் ஒரு வாணவெடி வெடிக்காமல் கீழே கிடந்தது. இந்த வாண வெடியை அதே பகுதியை சேர்ந்த சவுந்தர்ராஜன் (34) என்பவர் கல்லால் குத்தியுள்ளார்.
அப்போது திடீரென வெடி வெடித்ததில் சவுந்தரராஜனுக்கு முகம், இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சிதம்பரத்தை அடுத்த அண்ணாமலைநகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



