விழுப்புரம், ஆக. 12: விழுப்புரம் பொருட்காட்சியில் கடை ஒதுக்குவதாகக் கூறி பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக சென்னையை சேர்ந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ராஜசேகர் மனைவி மைதிலி(32). இவர் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பொருட்காட்சி நடத்தி வருகிறார். அதன்படி விழுப்புரம் தனியார் திருமண மண்டபத்தில் வாடகைக்கு எடுத்து சிறு, சிறு கடைகளாக பிரித்து எக்ஸ்போ பொருட்காட்சி என்ற பெயரில் கடந்த இரு தினங்களாக பொருட்காட்சி நடத்தியுள்ளார்.
அப்போது சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த சையது அன்வர்(28) என்பவர் இந்த பொருட்காட்சியில் கடை வைப்பதற்காக ரூ.1.50 லட்சம் வாடகை பேசி ரூ.50 ஆயிரம் அட்வான்ஸ் கொடுத்துள்ளார். இதனிடையே பொருட்காட்சி உரிமையாளர் மைதிலி பணம் வாங்கிக்கொண்டு, கடையை ஒதுக்கவில்லையாம். இதனால் சையது அன்வர் தான்கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பி கேட்டபோது மைதிலி தரமறுத்து அவரை திட்டி தாக்கியுள்ளார். இதுகுறித்து சையது அன்வர் அளித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சி பதிவுகளின் அடிப்படையில் விசாரணை செய்து மைதிலியை கைது செய்தனர்.



