விருத்தாசலம், அக். 2: ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற சேது அதிவிரைவு ரயிலில், பயணியிடம் செல்போன் திருடிய வாலிபரை விருத்தாசலம் ரயில்வே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிவகங்கை மாவட்டம் பாதமாத்தூர் அடுத்த மணி நகரைச் சேர்ந்தவர் மணிமுத்து(32). இவர் புதுச்சேரியில் உள்ள தனது தாய்மாமா வீட்டிற்குச் செல்வதற்காக, தனது சித்தப்பாவுடன் சிவகங்கையில் இருந்து விழுப்புரம் வரை சேது அதிவிரைவு ரயிலில் முன்பதிவில்லா பொதுப் பெட்டியில் பயணம் செய்தார்.
நேற்று அதிகாலை விருத்தாசலம் ரயில் நிலையம் அருகே ரயில் வந்துகொண்டிருந்தபோது, மணிமுத்துவின் சட்டைப் பையில் இருந்த சுமார் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான செல்போனை மர்ம நபர் ஒருவர் திருடியுள்ளார். உடனே சுதாரித்துக் கொண்ட மணிமுத்து, அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அந்த நபரை கையும் களவுமாக பிடித்து விசாரித்தபோது, சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, சாலையூர் காசிம் ராவுத்தர் தெருவைச் சேர்ந்த அப்துல் கரீம் என்பவரது மகன் தமீம் அன்சாரி (29) என்பது தெரியவந்தது.
செல்போனை திருடியதை ஒப்புக்கொண்ட அவரை, விருத்தாசலம் ரயில்வே காவல் நிலையத்தில் மணிமுத்து ஒப்படைத்தார்.இதுகுறித்து விருத்தாசலம் ரயில்வே காவல் உதவி ஆய்வாளர் ரவிகுமார் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தமீம் அன்சாரியைக் கைது செய்ததுடன் அவரிடமிருந்து திருடப்பட்ட செல்போனை பறிமுதல் செய்து அவரை விருத்தாசலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

