விழுப்புரம் மார்க்கெட் கமிட்டியில் விளைபொருட்கள் கொள்முதல் செய்யாததை கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்
விழுப்புரம்: விழுப்புரத்தில் மார்க்கெட் கமிட்டிகளில் விவசாயிகளிடம் விளைபொருட்கள் கொள்முதல் செய்யாமல் இருப்பதை கண்டித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் கிழக்குபாண்டி ரோட்டில் சாலைமறியல் போராட்டம் நேற்று நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலிவரதன் தலைமையில் நடந்த போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 20 நாட்களாக ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் சரியாக இயங்காமல் உள்ளது. இந்த மார்க்கெட் கமிட்டிகளுக்கு தினசரி நெல், மணிலா, மக்காச்சோளம் மற்றும் சிறுதானிய பயிர்களை கொண்டுவந்து விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் 20 நாட்களாக இ(-)நாம் 2.0 திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் விவசாயிகளிடம் விளைபொருட்களை கொள்முதல் செய்யாமல் இருந்து வருகின்றனர்.
இதனால் நாங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறோம். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. விவசாயிகள் விளைவித்த பொருட்கள் விற்பனை செய்யமுடியாமல் பாதிக்கப்பட்டு வருகிறோம். எனவே மாவட்ட நிர்வாகம் இ(-)நாம் 2.0 திட்டம் குறித்து வியாபாரிகளுக்கு உரிய பயிற்சி அளித்து இந்த திட்டத்தை எளிமைப்படுத்தி விவசாயிகளிடமிருந்து விளைபொருட்களை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். விவசாயிகளின் வங்கி கணக்கிற்கே கொள்முதல் செய்த விளைபொருட்களுக்கான பணத்தை செலுத்த வேண்டும் என்று கூறினர்.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் விழுப்புரம் மேற்குகாவல்நிலைய போலீசார் சம்பவஇடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டுசென்று வியாபாரிகள், மார்க்கெட் கமிட்டி, விவசாயிகள் அடங்கிய முத்தரப்பு கூட்டம் நடத்தி உரிய தீர்வு காண்பதாக உறுதியளித்த பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக சுமார் 30 நிமிடத்திற்கு மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


