செஞ்சி, அக். 30: செஞ்சி சிறுமி மாயமான அன்று அதிகாலை வீட்டின் கதவை யாரோ தட்டியதாக மூதாட்டி அளித்த தகவல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டியை சேர்ந்த வடிவேலு, பவானி ஆகியோரின் இளைய மகள் ஹேமலதா (7) மாயமானதாக தொடர்பாக பலரிடம் விசாரணை நடத்தியும் எந்த துப்பும் துலங்காததால் சிபிசிஐடி போலீசார் விழிபிதுங்கி வருகின்றனர். இதனிடையே, நேற்றுமுன்தினம் சிறுமி வீட்டின் அருகே 200 மீட்டர் தொலைவில் வசித்துவரும் மணிமேகலை (75) என்ற மூதாட்டியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
அதில், சிறுமி காணாமல் போன அன்று அதிகாலை 3 மணியளவில் யாரோ மர்ம நபர்கள் 2, 3 முறை எனது வீட்டின் கதவை தட்டினார்கள். நான் எழுந்து வரவில்லை. காலையில் எழுந்து பார்த்தால் சிறுமியை கடத்திவிட்டதாக கூறிய தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார். ஒரு வேளை மூதாட்டியின் வீட்டின் கதவை தட்டியவர்கள்தான் சிறுமியை கடத்தினார்களா என்று போலீசார், மூதாட்டி மற்றும் அவரது வீட்டில் வசித்துவரும் 3 பேரிடம் விசாரணை நடத்தினர். ஏற்கனவே பக்கத்து வீட்டில் வசிப்போரும், ‘‘சிறுமி மாயமான அன்று அதிகாலை அலறல் சத்தம் கேட்டது, நாய்கள் குரைத்தது’’ என்று சிபிசிஐடி போலீசாரிடம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று மீண்டும் சிறுமியின் தாய் பவானி, சிறுமியின் பாட்டியிடம் போலீசார் விசாரணையை தொடங்கினர். அவர்களிடம் நீண்டநேரம் விசாரணை நடத்தப்பட்டது. எனினும் எந்த துப்பும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், சிறுமியின் தாய்க்கு கடந்த சில நாட்களாக வந்த 600 போன்கால் அழைப்புகளில் பேசிய நபர்கள் யார், யார்? என்பதை கண்டறிந்து அவர்களிடம் விசாரணை நடத்த 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தனியாக நேற்று முதல் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இதேபோல், ஆலம்பூண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள ஒரு தனி அறையில் சிறுமியின் தாய், சிறுமியின் சகோதரி, அங்குள்ள ஆஞ்சநேயர் கோயிலில் பூஜை நடத்தி வரும் பூசாரி மற்றும் மாயமான சிறுமிக்கு ஜாதகம் எழுதி கொடுத்த காத்தவராயன் ஆகியோரிடம் நேற்று மீண்டும் விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் பைக்கில் ஆலம்பூண்டியின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று விசாரணை நடத்தினர்.


