விழுப்புரம், அக். 30: விழுப்புரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை கண்டமானடி அரசு ஊழியர் நகரை சேர்ந்தவர் உதயகுமார். இவரது மனைவி நளினி(40). கடந்த 23ம் தேதி வீட்டை பூட்டிக்கொண்டு வெளியூர் சென்றுள்ளார். நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது இரும்பு பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 400 கிராம் வெள்ளி பொருட்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது.
இதேபோல் அதே பகுதியில் வசித்துவரும் புஷ்பராஜ்(40) என்பவர் தனது வீட்டின் முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தையும் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து திருடிச்சென்றுள்ளனர். மேலும் அதே பகுதியை சேர்ந்த அருள்ராஜ்(45) என்பவரின் பைக்கையும் திருடிச் சென்றுள்ளனர். மேலும் அப்பகுதியில் 2 வீடுகளில் திருட்டு முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.
தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள், தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதனிடையே இந்த திருட்டில் ஈடுபட்டது ஒரே கும்பல் என தெரிய வந்துள்ளது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரத்திற்கு வந்த சென்னை போலீசார்
விழுப்புரம் அரசு ஊழியர் நகரில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல், சென்னை பகுதியிலும் 2 வீடுகளில் கைவரிசை காட்டிவிட்டு, பைக்குகளை திருடிக் கொண்டு விழுப்புரத்திற்கு வந்துள்ளது தெரியவந்தது. இதையறிந்த சென்னை குற்றப்பிரிவு போலீசார், அவர்களை பிடிப்பதற்காக விழுப்புரத்திற்கு வந்துள்ளனர். இங்குள்ள உள்ளூர் போலீசாருடன் திருட்டு நடந்த அரசு ஊழியர் நகருக்கு சென்று விசாரணை நடத்தினர்.


