விருத்தாசலம், அக். 29: விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் வயிற்று வலிக்காக வந்த முதியவருக்கு நெஞ்சு பகுதிக்கு ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தால் நோயாளி கடும் அதிர்ச்சி அடைந்தார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். கடந்த 21ம் தேதியன்று வயிற்று வலிக்காக சிகிச்சை பெற வந்த வேப்பூர் அருகே உள்ள காஞ்சிராங்குளம் கிராமத்தை சேர்ந்த சின்னசாமி என்ற முதியவரை பரிசோதித்த அரசு மருத்துவர், அவருக்கு நெஞ்சு பகுதிக்கு ஸ்கேன் எடுத்து வருமாறு பரிந்துரைத்துள்ளார்.
படிப்பறிவில்லாத அந்த முதியவரும் மருத்துவர் கூறியதை நம்பி, சிரமப்பட்டு நெஞ்சு பகுதிக்கு ஸ்கேன் எடுத்து வந்துள்ளார். ஆனால், அந்த ஸ்கேன் முடிவில் நெஞ்சு பகுதியில் எந்த பாதிப்பும் இல்லை என தெரியவந்தது. கடுமையான வயிற்று வலியோடு அந்த முதியவர் நேற்று மீண்டும் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்து கண்ணீர் மல்க காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. நேற்று காலை புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்காக சுமார் 50க்கும் மேற்பட்ட நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
சுமார் 45 நிமிடங்களுக்கும் மேலாக மருத்துவர் இல்லாததால் முதியவர்கள், பெண்கள் உள்ளிட்ட நோயாளிகள் கால் கடுக்க வரிசையில் நின்றபடி கடும் சிரமத்துக்குள்ளாகினர். சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது உரிய விசாரணை நடத்தி துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


