விருத்தாசலம், செப். 29: பெண்ணாடத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த வெல்டிங் தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருத்தாசலம் அடுத்த, பெண்ணாடம் கீழப்புதூர் தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் லட்சுமணன் (45). திருமணம் ஆகாத இவர், அதே பகுதியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வாடகை வீட்டில் வாடகைக்கு தங்கி வந்தார். சென்னையில் வெல்டிங் வேலை செய்து வந்த லட்சுமணன், அவ்வப்போது பெண்ணாடத்தில் உள்ள தனது வாடகை வீட்டிற்கு வந்து தங்கி செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், நேற்று மாலை சுமார் 5 மணியளவில் லட்சுமணன் தங்கியிருந்த வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக பெண்ணாடம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் போலீசார், வீட்டின் கதவைத் திறந்து பார்த்தனர். அப்போது லட்சுமணன் அமர்ந்த நிலையிலேயே சடலமாகக் கிடந்தது தெரியவந்தது. அவர் மது அருந்திய நிலையில் உயிரிழந்திருக்கலாம் என்றும், அவர் இறந்து சுமார் இரண்டு நாட்கள் ஆகியிருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.இதையடுத்து லட்சுமணனின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் பெண்ணாடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

