திண்டிவனம், செப். 29: தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எஸ்.ஐ.ஆர் முறையை பயன்படுத்தி பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவான கட்சிகள் வெற்றி பெற்றதாக கூறி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ரங்கபூபதி தலைமையில் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் மோகன் குமார ராஜா முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 100க்கும் மேற்பட்டோர் திடீரென்று சாலையின் குறுக்கே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஒருவர் தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ்குமாரின் உருவப் படத்தை செருப்பால் அடித்து போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவற்றை தடுத்த போது காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக வந்த காங்கிரஸ் கட்சியினர் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியவாறு காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு வந்தனர்.இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

