Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மரக்காணம் அருகே நேற்று அதிகாலை 2 கூரை வீடுகள் தீப்பிடித்து எரிந்து ரூ.5 லட்சம் பொருட்கள் சாம்பல்

மரக்காணம், செப். 29: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே முட்டுக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் (55). கூலி தொழிலாளியான இவருக்கு மனைவி, குழந்ைதகள் உள்ளனர். இவர் நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் மின்கசிவு காரணமாக இவரது கூரை வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் தீ, வீடு முழுக்க பரவி உள்ளது. இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். அது தோல்வியில் முடிந்ததால் எதிரில் இருந்த சந்திரனின் தாயார் காமாட்சி (70) என்பவரின் வீட்டிற்கும் தீ பரவியது. ஆனால் தீவிபத்தை அறியாமல் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் அங்கு ஒடிவந்த பொதுமக்கள் துணிச்சலாக வீட்டிற்குள் புகுந்து மூதாட்டியை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

பின்னர் பொதுமக்கள் மரக்காணம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் 1 மணி நேரமாக தண்ணீரை பீய்ச்சி போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் 2 வீடு மற்றும் வீட்டினுள் இருந்த சொத்து பத்திரம், ரேஷன் கார்டு, ஆதார் அட்டை ஆவணங்கள், பீரோ, டிவி, பாத்திரங்கள், துணிமணிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. மொத்தம் ரூ. 5 லட்சம் மதிப்பிலான பணம், பொருட்கள் எரிந்து தீக்கிரையானது குறித்து தகவல் கிடைக்கவே வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் தீவிபத்து நடந்த பகுதியை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே நேற்று காலை ஊர் திரும்பிய சந்திரன் குடும்பத்தினர் எரிந்து சாம்பலான தங்கள் வீட்டை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அவர்களுக்கு ஆறுதல் கூறிய அப்பகுதி மக்கள், தீவிபத்தில் பாதிக்கப்பட்ட 2 வீடுகளுக்கும் தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.