விருத்தாசலம், செப். 18: விருத்தாசலம் நகராட்சி கல்லூரி நகர் 2வது தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நேற்று காலை இப்பகுதியில் சில குறிப்பிட்ட வீடுகளுக்கு மட்டும் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 10 பேர், விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த விருத்தாசலம் காவல் ஆய்வாளர் சந்துரு மற்றும் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து நகராட்சி அலுவலர்களும் அங்கு வந்து, உடனடியாக குடிநீர் விநியோகத்தை சரிசெய்து தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


